சாதாரண பைக் டாக்ஸி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ₹331.36 கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ள அதிர்ச்சி தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. இது, பல இந்திய நடுத்தர வர்க்க ஆண்களின் கனவு வாழ்க்கையாக இருக்கையில், அந்த ராபிடோ ஓட்டுநருக்கோ இப்போது அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் தீவிர விசாரணையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
The Enforcement Directorate has uncovered a ₹331.36-crore money trail flowing through the bank account of a Rapido bike driver while investigating the 1xBet illegal betting network, officials said. The deposits were made between August 2024 and April 2025. According to the ED,… pic.twitter.com/MCb7rr38f6
— IndiaToday (@IndiaToday) November 28, 2025
இந்த மிகப்பெரிய பணமோசடி நடவடிக்கை, 1xBet ஆன்லைன் சூதாட்ட நெட்வொர்க்குடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆகஸ்ட் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை எட்டு மாத கால இடைவெளியில், ஓட்டுநரின் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை வந்துள்ளது. ஏழ்மையான நிலையில் உள்ள அந்த ஓட்டுநர், தனது கணக்கு இத்தகைய மோசடிக்குப் பயன்படுத்தப்படுவதை அறியாமலேயே இருந்துள்ளார் என்றும், அவர் இந்த ‘பணக் கடத்தல்’ வேலையில் ஒரு சிறு கருவி மட்டுமே என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த ராபிடோ ஓட்டுநரின் கணக்கிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, உதய்பூரில் நடந்த ஒரு ஆடம்பரத் திருமணத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திருமணமானது குஜராத்தைச் சேர்ந்த இளம் அரசியல் பிரமுகரான ஆதித்ய சூலா என்பவருடன் நேரடியாகத் தொடர்புடையது என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. விசாரணைக்குட்பட்ட ஓட்டுநர், தனது கணக்கில் நடந்த பரிமாற்றங்கள் குறித்து முழுமையாகத் தனக்குத் தெரியாது என்று சாதித்துள்ளார்.
ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்று கருதப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கில் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, குஜராத் அரசியல் பிரமுகருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களின் சங்கிலித்தொடரை முழுமையாகக் கண்டறியும் முயற்சியில் அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது.
