அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நேற்று (நவ. 28) சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்றைக்கு மக்கள் இருக்கும் மனநிலை, தமிழகத்தைப் புதிய இயக்கம் ஆள வேண்டும் என்பதே. அதற்கேற்ப மக்களால் நேசிக்கப்படுகிற தலைவராகத் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்” என்று தெரிவித்தார். மேலும், “முதன் முதலில் எம்ஜிஆர் இயக்கத்தைத் தொடங்கியபோது, திரைப்படம் போல் 100 நாள்தான் ஓடும் என்று சொன்னார்கள்.

ஆனால், அவருடைய ஆட்சி இறுதிவரை யாராலும் வெல்ல முடியாத ஆட்சியாக இருந்தது. எம்ஜிஆர் வழியில் விஜய்யும் இன்று அவருடைய பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்” என்றும், “2026 என்பது மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமரும் காலமாக உருவாகும்” என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்திலும் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “நான் இப்போது தவெக தலைவரும், நாளைய முதல்வருமான விஜய் உடன் இருக்கிறேன். திராவிட இயக்கத்தை மீண்டும் உருவாக்க எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், மக்கள் சக்தியோடு எங்கள் பணிகள் அமையும்” என்றார்.

மேலும், “ஆண்டுக்கு ₹.500 கோடி வருவாயை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் சேவைக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். தமிழகத்தில் ஒரு புனித ஆட்சியைக் கொண்டுவரவே இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். என் உயிர் மூச்சு உள்ளவரை இவர்களுடன் இருப்பேன்” என்று உறுதியளித்தார். தன்னைப் போலவே அதிமுகவில் இருந்து வேறு யாராவது தவெகவில் சேர்வார்களா என்ற கேள்விக்கு, “அதை இப்போது சொன்னால் பிரச்சினைதான் உருவாகும்” என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.