உலகளவில் உணவு தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், கொல்கத்தாவில் ஒரு சாலையோரக் கடையில், ஒரு கடைக்காரர் வெறும் வெள்ளரிக்காய்த் தோலை மட்டுமே கிலோ ₹10-க்கு விற்பனை செய்வதைக் காணலாம்.

இதை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, பலரும் அந்தக் கடைக்கு வந்து வெள்ளரிக்காய்த் தோலை விரும்பி வாங்கிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. அங்கு வந்த ஒரு நபர், கடைக்காரரிடம், “அங்கிள், வெள்ளரிக்காய்த் தோல் கிலோ எவ்வளவு?” என்று கேட்க, அதற்கு அவர், “கிலோ ₹10” என்று பதிலளித்தார். மேலும், “யார்தான் வெள்ளரிக்காய்த் தோலைச் சாப்பிடுவது?” என்று கேட்டதற்கு, “மக்கள் சாப்பிடுகிறார்கள்” என்று அவர் வேடிக்கையாகப் பதிலளித்தார்.

இந்த 24 விநாடி வீடியோவை ‘@seraj_liv3’ என்ற எக்ஸ் (X – Twitter) பயனர், “கொல்கத்தா மக்கள் உண்மையிலேயே வெள்ளரிக்காய்த் தோலைச் சாப்பிடுகிறார்களா? கொல்கத்தா நண்பர்கள் உறுதிப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, நூற்றுக்கணக்கான பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. பலரும் இந்த விநோத விற்பனை குறித்துப் பல எதிர்வினைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பயனர், “நானும் கொல்கத்தாவைச் சேர்ந்தவன்தான், ஆனால் இதுவரை வெள்ளரிக்காய்த் தோலை விற்பதைப் பார்த்ததில்லை. இது பொய்யான வீடியோ. இதுவெல்லாம் ரீல் செய்வதற்கான வேலை” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இது உண்மையாக இருந்தாலும் சரி, கேலியாக இருந்தாலும் சரி, ₹10-க்குக் கிடைத்தால், தோல்கூட ஒரு டிரெண்ட் ஆகிவிடும்” என்று கமென்ட் செய்துள்ளார். மேலும் ஒரு பயனர், “மக்கள் வெள்ளரிக்காய்த் தோலை என்ன செய்வார்கள்? தோலை உரிப்பதன் நோக்கம்தான் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.