புது தில்லி, பிரேம் நகர் பகுதியில் ஆறு வயது சிறுவன் மீது பிட் புல் நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதி முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம், அருகில் இருந்த கேமராவில் முழுவதும் பதிவாகி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
வீடியோவில், சிறுவன் தனது வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டுக்காரரின் பிட் புல் திடீரென பாய்ந்து தாக்கும் காட்சி தெளிவாக காணப்படுகிறது. நாய் சிறுவனின் வலது காதைக் கடித்ததில், குழந்தை பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தை பார்த்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் உடனடியாக விரைந்து சென்று சிறுவனை நாயின் பிடியிலிருந்து மீட்டனர். சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நாய், ராஜேஷ் பால் (50) என்பவருக்குச் சொந்தமானது. காணொளியில், ராஜேஷ் பாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் நாயை அடக்க முற்பட்டும், பயன் இல்லை. பின்னர் அவர் நாயை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். காயம் அடைந்த சிறுவன் முதலில் ரோஹினி மருத்துவமனைக்கும் பின்னர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். சிறுவன் தனது வலது காதை முழுவதுமாக இழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
A 6 year old child was playing in Delhi.
A Pit Bull dog of neighbour attacked him brutally. The child lost his ear and is admitted in Hospital.
Dog Lovers who give excuse that dog attacks because they are hungry. Was this pet dog Hungry?
Pit Bull dogs should be banned in India… pic.twitter.com/DlykkE50Hc
— Ankur Singh (@iAnkurSingh) November 25, 2025
சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரம்ப விசாரணையில், ராஜேஷின் மகன் சச்சின் பால் ஒரு ஆண்டுக்கும் மேலாக முன்பு இந்த நாயை வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும், தற்போது அவர் கொலை முயற்சி வழக்கில் சிறையில் உள்ளதாகவும் தெரியவந்தது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ANI-யிடம், “என் கடைக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை நாய் திடீரென தாக்கி இழுத்துச் சென்றது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன” என தெரிவித்தார். மேலும் சிறுவனின் தந்தையின் வாக்குமூலத்தையும் மருத்துவ அறிக்கைகளையும் பதிவு செய்த போலீசார், பிரேம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நாய் உரிமையாளர் ராஜேஷ் பாலை கைது செய்துள்ளனர்.
