ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த துயரகரமான விபத்து ஒன்று அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஜெய்ப்பூர் டிரான்ஸ்போர்ட் நகர் சுரங்கப்பாதையில் பைக் ஸ்டண்ட் செய்யும்போது, இரண்டு இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டம்பிங் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் மீனா மற்றும் அஜய் சர்மா என அடையாளம் காணப்பட்ட நண்பர்கள் இருவரும், தங்களது பைக்கில் ஸ்டண்ட் செய்து எடுத்த வீடியோக்களை அடிக்கடி சமூக ஊடகங்களில் பதிவேற்றுவார்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, அவர்கள் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் வீடியோ பதிவு செய்தபடி அதிக வேகத்தில் பைக் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
जयपुर ट्रांसपोर्ट नगर टनल में हुआ हादसे के लाइव वीडियो , सबक ध्यान रखें @jaipur_police @jpr_traffic pic.twitter.com/WC9h6zkty3
— Ishant Vashistha 🐦 (@Ishantvashist) November 24, 2025
வேகமாக வந்த அவர்கள் மோட்டார் சைக்கிள் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை முந்த முயன்றபோது அதில் மோதுகிறது. கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் சுழன்று கீழே விழுகிறது. சில நொடிகளில் பின்னால் இருந்து வந்த கான்கிரீட் மிக்சர் டம்பிங் லாரி இருவரையும் நேரடியாக மோதியதில் அவர்கள் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள், “விபத்து மிகவும் கொடூரமாக இருந்தது; உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்திருந்தன” என்று தெரிவித்துள்ளனர்.
இரண்டு இளைஞர்களும் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமானவர்கள். இருவருக்கும் பைக் ஓட்டுதல், அதிக வேகம் மற்றும் ஸ்டண்ட் செய்வதில் ஆர்வம் அதிகம். தங்கள் பைக்குகளை சர்வீசிங் செய்வதற்காக தௌசாவிலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்திருந்தனர். அஜய் சர்மா தனது மோட்டார் சைக்கிளை வெறும் நான்கு மாதங்களுக்கு முன்னரே வாங்கியிருந்தார். இந்த விபத்திற்கு காரணமான டம்பிங் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட் குனி சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனங்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தாலும், இளைஞர்கள் தடை விதிகளை மீறி அதிக வேகத்தில் பைக்குகளை ஓட்டுவது பொது நிகழ்வாகவே தொடர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்குப் பிறகு, போக்குவரத்து போலீசார் சுரங்கப்பாதை நுழைவாயிலில் கண்காணிப்பை அதிகரித்து, பைக் ஓட்டுபவர்களை முற்றாகத் தடுத்து வருகின்றனர்.
