கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், டிசம்பர் 4 முதல் பரப்புரை தொடங்கத் திட்டமிட்ட நிலையில், காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் அது தள்ளிப்போனது.
இந்நிலையில், இன்று (நவ. 23) சென்னை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், முழுக்க முழுக்க உள் அரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் நிகழ்வைத் தவிர்ப்பதற்காக, இந்த நிகழ்ச்சிக்குக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 பேருக்கு மட்டுமே QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உள் அரங்க மக்கள் சந்திப்பில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை மறைமுகமாகச் சாடினார். “அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று விமர்சித்தார்.
மேலும், தனது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை வெளியிட்ட அவர், தவெக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு கட்டி கொடுப்போம். வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கொடுப்போம். கார் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்துவோம். பட்டதாரிகள் உருவாக வேண்டும். அரசு மருத்துவமனைக்கு மக்கள் வரும் வகையில் மாற்ற வேண்டும். மீனவர்கள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கருத்து கேட்டு அதனை செயல்படுத்துவோம். சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைகழகம், கோவை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும்” என்றார்.
