தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் டிசம்பர் 4-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இப்பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பணி நெருக்கடி காரணமாக வருவாய் துறை ஊழியர்களின் சங்கம், நேற்று முன்தினம் வாக்காளர் திருத்தப் பணிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று (நவம்பர் 18) பல ஊழியர்கள் பணிக்கு வராததால், அரசு சார்பில் ‘வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலைச் சமாளிக்கும் வகையிலும், பணிகளை விரைவுபடுத்தவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான மாத ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு இந்த ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இதற்கிடையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சியில் வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்ய நவம்பர் 25-ஆம் தேதி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.