தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின்போது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும் என்பதை ஜி.கே.வாசன் உறுதி செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இரு தலைவர்களும் கூட்டணியில் த.மா.கா-வுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், “அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் விரைவில் இணைவார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில், பீகாரை விட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அதிக இடங்களில் மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.