சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ, விமான நிலையங்களில் இந்தியப் பயணிகள் வீல்சேர் உதவியை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த எக்ஸ் பயனர் ஒருவர் வெளியிட்ட அந்தக் காட்சியில், விமான நிலைய ஊழியர்களால் தள்ளப்படும் வீல்சேர்களில் பயணிகள் வரிசையாக அமர்ந்து செல்வது பதிவாகியிருந்தது.
🇺🇸🇮🇳美印航線候機大廳,全是坐輪椅的印度人。
因為殘疾旅客可以享受優先登機、全程接送等服務,導致部分航線“殘疾”旅客比例高達 80%。🤔 pic.twitter.com/tQ0F32E55N
— 油爆琵琶拌着面🇨🇳 (@zmx8067) November 13, 2025
இந்தியா – அமெரிக்கா வழித்தடங்களில் பயணிக்கும் பல பயணிகள், முன்னுரிமைப் பயணம் பெறுவதற்காகவும், நீண்ட வரிசைகளைத் தவிர்க்கவும், தேவை இல்லாமல் வீல்சேர் சேவையை பயன்படுத்துகின்றனர் என்று அந்தப் பயனர் குற்றம் சாட்டினார். மேலும், சில விமானங்களில் வீல்சேர் கோருபவர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் வரை கூட இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ இந்தியாவுக்குள் பரவிய பிறகு, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா இந்த விவகாரத்தில் தலையிட்டு கடும் எதிர்வினையாற்றினார். அவர் அந்தப் பதிவை மேற்கோள் காட்டி, இந்தத் தவறான பயன்பாட்டைத் தடுக்க, வீல்சேர் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். “ஒவ்வொரு விமான நிலையத்திலும் கூடுதலாக ரூ. 5,000 கட்டணம் வசூலிக்க வேண்டும், அப்போதுதான் எத்தனை உண்மையான பயணிகள் இருக்கிறார்கள் என்று தெரியும்!” என்று அவர் பதிவிட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது.
பல பயனர்கள் அவரது ஆலோசனையை ஆதரித்தாலும், உண்மையாகவே உடல்நலக்குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக வீல்சேரை நம்பி இருக்கும் பயணிகளுக்கு இது அநியாயமான சுமையாக மாறும் என்று எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. இதையடுத்து, சி.என்.பி.சி-டி.வி18 அறிக்கை ஒன்றும், முக்கிய விமான நிலையங்களில், குறிப்பாக நீண்ட தூர சர்வதேச விமானங்களில் வீல்சேர் கோரிக்கைகள் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், டிஜிசிஏ இந்தச் சிக்கலைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
