கடந்த நவம்பர் 10ஆம் தேதி டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்து, 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது
. இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. வெடிப்பில் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனதால், அவர் தான் காரை ஓட்டி வந்தாரா என்ற சந்தேகம் நிலவியது. இதையடுத்து, உமர் முகமதுவின் தாயார் மற்றும் சகோதரரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டு, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த டி.என்.ஏ. பரிசோதனையில், இரு மாதிரிகளும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்திப் போனதால், கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி என்ற புதிய அதிர்ச்சிகரமான தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட பயங்கரவாத மருத்துவர்களின் டைரி குறிப்புகளில் இருந்தும், விசாரணையின் போதும் ‘உகாசா’ (Ugasa) என்ற சங்கேதப் பெயரில் அழைக்கப்படும் துருக்கியப் பயங்கரவாதி குறித்துத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற 2022ஆம் ஆண்டிலேயே உகாசா தலைமையில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. உமர் முகமது கடந்த 2022ஆம் ஆண்டு உகாசாவைச் சந்திப்பதற்காகத் துருக்கிக்குச் சென்று இரண்டு வாரங்கள் தங்கியுள்ளார்.
அப்போது உகாசா, டிஜிட்டல் வழியைத் தவிர்த்து ரகசியமாக ஆட்களை அமர்த்துவது எப்படி, தொடர் தாக்குதல்களை நடத்துவது எப்படி என்பது பற்றியெல்லாம் உமருக்குப் பயிற்சி அளித்துள்ளார். குறிப்பாக, கார்களில் சென்று தாக்குதல் நடத்துவது குறித்தும் கற்றுக்கொடுத்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, உகாசாவின் தடத்தைக் கண்டுபிடிக்க சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் உதவியை இந்திய அதிகாரிகள் நாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
