‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அபிநய், உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இவர் பிரபலமானார். தமிழ், மலையாளம் என 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, ‘காக்கா முட்டை’ போன்ற படங்களில் சில கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தும், ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யூத் ஜம்வாலுக்குக் குரல் கொடுத்தும் திரையுலகில் பங்களித்துள்ளார். 44 வயதான அபிநய், சமீப காலமாகப் பட வாய்ப்புகள் இல்லாததாலும், வருமானம் இழந்ததாலும் வறுமையில் சிக்கித் தவித்தார்.
கடந்த சில மாதங்களாகக் கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி, அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். சிகிச்சைக்குப் பண உதவி கோரி வீடியோ வெளியிட்ட நிலையில், அவருடன் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்திருந்த நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் நிதியுதவியும், நடிகர் KPY பாலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கி உதவி செய்தனர். சமீபத்தில் ஒரு பட விழாவில் பங்கேற்ற போதே தனக்கு உடல்நிலை மோசமாகி வருவதாகப் பேசியிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
