பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திறமைக்கு பாபர் அசாம் எப்படிப் பெயர் பெற்றுத் தந்தார் என்பதைப் பற்றிப் பேசிய கிரிக்கெட் வீரர் அசாம் கான், பாபர் அசாமை இந்தியக் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தாக்கத்துடன் ஒப்பிட்டார்.

“பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதும் வேகப்பந்து வீச்சுக்குத்தான் பெயர் போனது. ஆனால், பாபர் அசாம் அதைத் தன் பேட்டிங்கால் பிரபலமாக்கினார். இது ஒரு பெரிய வித்தியாசம். இந்தியாவிற்கு விராட் கோலி செய்ததைப் போல பாபர் செய்துள்ளார்,” என்று அசாம் கான் Crickwick போட்காஸ்டில் பேசியுள்ளார்.

பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இருவரின் பயணத்தையும் ஒப்பிட்ட அசாம் கான், இருவருக்கும் அமைந்த சூழலில் உள்ள பெரிய வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டினார். “விராட் கோலி கிரிக்கெட் ஆட ஆரம்பித்த காலத்தில், அவருக்கு அருகில் வி.வி.எஸ். லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் மற்றும் எம்.எஸ். தோனி போன்ற பல ஜாம்பவான்கள் இருந்தனர். ஆனால், பாபருடன் யார் இருந்தார்கள்? யாரும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதே கருத்தை எதிரொலித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொஹ்சின் கான், பாபரைச் சுற்றி தரமான வீரர்கள் ஆதரவாக இல்லை என்றும், பாபர் மற்றும் முகமது ரிஸ்வான் மீது தொடர்ந்து சதமடிக்க வேண்டிய அதிக அழுத்தம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “ஒரு சிறந்த வீரர் அவரைச் சுற்றியுள்ள மற்ற வலிமையான வீரர்களால் இன்னும் சிறப்பானவராக உருவாக்கப்படுகிறார்,” என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பாபர் அசாம் மற்றும் மற்ற வீரர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி  இருப்பதாகவும், அணியின் வெற்றிக்குச் சமமான திறன் கொண்ட வீரர்கள் தேவை என்றும் மொஹ்சின் கான் வலியுறுத்தினார்.