உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமார் என்பவரின் ஒரே மகனான வைபவ் ஷா (வயது 17), பிளஸ் 1 படித்து வந்த நிலையில், பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த புல்லட் பைக்கில் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றாகப் படித்தால் பைக் வாங்கித் தருவதாகத் தந்தை உறுதியளித்த நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பு தனது 17வது பிறந்தநாளைக் கொண்டாடிய வைபவுக்கு அவரது தந்தை சந்தோஷ் குமார் புல்லட் பைக் பரிசாக அளித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை சுமார் 7 மணியளவில் வைபவ் ஷா தனது நண்பன் ஒருவருடன் அந்தப் புல்லட் பைக்கில் ஆயிஷானா பகுதிக்கு நெடுஞ்சாலை வழியாகச் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த ஆம்னி பஸ் அவர்கள் ஓட்டிச் சென்ற புல்லட் மீது மோதியது. ஆம்னி பஸ் மோதியதில் புல்லட் பைக்கில் சென்ற வைபவ் ஷா மற்றும் அவரது நண்பன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வைபவ் ஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த வைபவின் நண்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற ஆம்னி பஸ் டிரைவரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் பிறந்தநாள் பரிசால் ஏற்பட்ட இந்த விபத்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
