உத்தரப் பிரதேச மாநிலம், படௌன் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை இடம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், மெஹ்பூப் (20) என்ற இளைஞர் தூணில் கட்டிப் போட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர் நகர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சஹஸ்வான் சாலையில் உள்ள மசூதியில், மெஹ்பூப் மற்றும் அதே பகுதியிலிருந்து வந்த மூன்று நபர்களுக்கும் இடையே, தொழுகை நடத்தும் இடம் குறித்து வியாழக்கிழமை அன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மற்றவர்கள் தலையிட்டு அதைச் சமாளித்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தொழுகைக்காக மெஹ்பூப் மீண்டும் மசூதிக்கு வந்தபோது, மீண்டும் மோதல் வெடித்தது. மசூதிக்கு வெளியே வந்த அவரை, மூன்று பேரும் சேர்ந்து கயிறால் தூணில் கட்டி, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். தீப்பிடித்ததில் கயிறுகள் அறுந்து போனதால், மெஹ்பூப் உயிர் தப்பித்து, பலத்த தீக்காயங்களுடன் வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அருகே உள்ள பெட்ரோல் பங்கில் சம்பவம் நடப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு மெஹ்பூப் பெட்ரோல் வாங்கும் காட்சி பதிவான சிசிடிவி ஆதாரத்தைக் கைப்பற்றினர். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ வைக்கப்பட்டதாக மெஹ்பூப் கூறிய தகவலையும், அவரே பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சியையும் வைத்து, போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.