ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எம்.வி.பி காலனியைச் சேர்ந்தவர் சூரிபாபு, ஆட்டோ ஓட்டுநர். அவருடைய மூத்த மகன் சாய் தேஜா (22) தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராகப் படித்து வந்தார். வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக இருந்த சாய் தேஜா, மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கருதப்பட்டார்.
ஆனால், அவரது வாழ்க்கை துயரத்தில் முடிந்தது என்பதே தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாய் தேஜாவை புள்ளியியல் துறை பேராசிரியை ஒருவரும், வகுப்பு பேராசிரியை ஒருவரும் தங்களது ஆசைக்கு இணங்குமாறு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களின் தவறான ஆசைக்கு இணங்க மறுத்ததால் செய்முறை தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வழங்கி மிரட்டியதுடன், சாய் தேஜாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர். “உன் வாழ்க்கையை நாசம் பண்ணிடுவோம்” என்று மிரட்டல்களும் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த சாய் தேஜா, நடந்ததை தனது தந்தையிடம் பகிர்ந்தார். இதையடுத்து சாய் தேஜாவின் தந்தையும் மாமாவும் கல்லூரிக்கு சென்று பேராசிரியைகள் மீது நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதை அறிந்த பேராசிரியைகள், வீட்டிலிருந்த சாய் தேஜாவுக்கு தொலைபேசியில் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால் மனம் உடைந்த சாய் தேஜா, தனது மொபைலில் ஒரு ஆடியோ பதிவு செய்து, பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பலமுறை மகனை தொடர்புகொள்வதற்கு முயன்ற சாய் தேஜாவின் தந்தை, பதில் வராததால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகன் தூக்கில் தொங்கியிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியில் மூழ்கினார்.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாய் தேஜாவின் மொபைலை பறிமுதல் செய்த போலீசார், பேராசிரியைகள் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேநேரத்தில், இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்லூரி மாணவர்கள், மாணவர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேராசிரியைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரினர். சாய் தேஜாவின் தற்கொலை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அச்சத்தையும் எழுப்பியுள்ளது.
