மும்பையில் நடைபெற்ற ஸ்பானிஷ் பாப் பாடகர் என்ரிக் இக்லேசியஸ் இசைக்கச்சேரி ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக இருந்தாலும், அதே நேரத்தில் பலருக்கு பெரும் அதிர்ச்சியையும் தந்தது. பாண்ட்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள MMRDA மைதானத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் குறைந்தது 73 மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மொத்த மதிப்பு சுமார் ரூ.23.85 லட்சம் எனக் கூறப்படுகிறது. ரூ.7,000 முதல் தொடங்கிய நுழைவு சீட்டுகளுடன் பலர் அதிக தொகை செலுத்தி மேடைக்கு அருகில் இடம் பிடித்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிவில் பலருக்கும் தங்களின் மொபைல்கள் காணாமல் போனது தெரிந்தது.
மும்பை போலீசார் இதுவரை 7 தனித்தனியான புகார்கள் பதிவு செய்துள்ளனர். புகார் அளித்தவர்களில் மேக்-அப் ஆர்டிஸ்ட், ஹோட்டல் தொழிலதிபர், மாணவர்கள், பத்திரிகையாளர் மற்றும் சில வியாபாரிகளும் அடங்குவர். நிகழ்ச்சி நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது போலீசாரால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருந்த என்ரிக் இக்லேசியஸ், தனது பிரபல பாடல்களான Hero, Bailamos, Escape மற்றும் Tonight (I’m Lovin’ You) ஆகியவற்றால் ரசிகர்களை மயக்கினார். மாலைக்கா அரோரா, வித்யா பாலன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். “மும்பையின் உற்சாகத்தை மீண்டும் உணர ஆவலாக உள்ளேன்” என அவர் நிகழ்ச்சிக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், அந்த உற்சாக இரவு திருட்டுச் சம்பவத்தால் ரசிகர்களுக்கு கசப்பான அனுபவமாக மாறியது.
