மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலி இருமல் மருந்துகளால் 24 குழந்தைகள் அண்மையில் உயிரிழந்த சர்ச்சை தொடரும் நிலையில், தற்போது ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 5 மாதக் குழந்தை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிந்துவா மாவட்டத்தில் உள்ள பிச்வா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் மினோட்டின் மகள் ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்ததால், அக்டோபர் 27 அன்று உள்ளூர் மருத்துவக் கடைக்காரரின் ஆலோசனையின் பேரில் ஆயுர்வேத இருமல் சிரப்பை வாங்கி அருந்தச் செய்துள்ளனர்.

மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து இருமல் மருந்து விற்கப்பட்ட மருத்துவக் கடையை சீல் வைத்து, மருந்து இருப்புகளைப் பறிமுதல் செய்தனர்.

மருந்து மாதிரிகள் அரசு ஆய்வகத்திற்குச் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், பிச்வா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.