தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சியாகக் கருதப்படும் நாம் தமிழர் கட்சியில் (நாதக) இருந்து சமீபகாலமாக முக்கியப் பொறுப்பாளர்கள் விலகிச் சென்று வருவது அக்கட்சிக்குச் சவாலாக மாறியுள்ளது.
அந்த வகையில், நாதகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் இன்று (அக்டோபர் 28) அதிமுகவில் இணைந்தார். சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாதகவின் குருதிக்கொடை பாசறை மாநிலத் துணைத் தலைவரும், செங்கமலநாச்சிபுரம் முன்னாள் ஊராட்சி மன்றப் பொறுப்புத் தலைவருமான மாரியப்பன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நாதகவின் மாநில அளவிலான பொறுப்பு வகித்த மாரியப்பன் அதிமுகவில் இணைந்தது, தென்மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கட்சியில் இணைந்த மாரியப்பனை வரவேற்று, அவருக்குப் பூங்கொத்துக் கொடுத்துப் பொன்னாடை அணிவித்தார். நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து அக்கட்சியின் தலைமை இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.
