கரூர் துயரச் சம்பவத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதில் கவனம் செலுத்தி முடங்கியிருந்த நடிகர் விஜய், தற்போது தனது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தத் தொடங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்காகப் புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். அரசியல் களத்தில் தனது செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக இந்தக் குழுவை விஜய் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிர்வாகக் குழுவில் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் செயல்பாடுகளைச் சீரமைத்து, அடித்தட்டு வரை கொண்டு செல்ல இந்தக் குழு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழுவிற்குத் தவெக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்தப் புதிய நிர்வாகக் குழுவின் நியமனம், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
