முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓ.பி.எஸ்., “இன்றைய சூழ்நிலையில் அனைத்துக் கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அ.தி.மு.க. பிரிந்து கிடக்கிறது.

பா.ம.க.வில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் சண்டை. இப்படி எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருக்கும்போது, தி.மு.க.வுக்குத் தானே ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது. இது கண்கூடாகவே தெரிகிறது,” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறது என மக்கள் பேசிக்கொள்வதைச் சுட்டிக்காட்டிய அவர், “எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால் தி.மு.க.வுக்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் பேசவில்லை” என்று கூறி, அந்தக் கருத்தை மக்களின் குரலாகப் பதிவு செய்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே தி.மு.க.வின் வெற்றிக்குச் சாதகமாக அமையும் என்ற கருத்தை ஓ.பி.எஸ். கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது