ஆப்கானிஸ்தான் உள்துறை துணை அமைச்சர் மற்றும் தாலிபான் தலைவரான மௌலவி முகமது நபி ஒமாரி, பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கான் படைகளும் பழங்குடியினரும் தேவையானபட்சத்தில் பாகிஸ்தான் படைகளை இந்திய எல்லை வரை பின்தொடர்வார்கள் என அவர் எச்சரித்துள்ளார். “ஆப்கான் மக்கள் மற்றும் மதத் தலைவர்கள் உங்களை ஒரு அடக்குமுறையாளர் என மத தீர்ப்பளித்தால், அல்லாஹ்வின் பெயரில் நான் சத்தியம் செய்கிறேன் – இந்திய எல்லை வரை கூட உங்களுக்கு பாதுகாப்பு கிடையாது” என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடியாக உரையாற்றியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவ நிர்வாகத்தையும் ஒமாரி கடுமையாக விமர்சித்துள்ளார். “பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் பிற நாடுகளின் உத்தரவுகளுக்கே இணங்கி செயல்படுகிறது. அவர்கள் தங்களின் முடிவுகளை சுயமாக எடுக்கவில்லை.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன் புகழ்ந்து பேசிய வீடியோவைக் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்,” என அவர் கூறினார். மேலும், “ஒரு காலத்தில் இழந்த ட்யூரண்ட் கோட்டிற்கு அப்பால் உள்ள பகுதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம்” என்றும் ஒமாரி தெரிவித்துள்ளார்.

தற்போது ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒமாரியின் இந்த எச்சரிக்கை பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளது. எனினும், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் அவசர போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனால், இரு தரப்பினரும் தற்காலிக அமைதியை நிலைநிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும், ஆப்கான் தலைவரின் எச்சரிக்கை, அந்த பிராந்தியத்தில் புதிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.