இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவா மாகாணத்தில் உள்ள பசிர்தென் ரெஜென்சியில், அக்டோபர் 1 அன்று ஒரு பிரம்மாண்டமான திருமணம் நடைபெற்றது. 74 வயது முதியவருக்கும், 24 வயது இளம் பெண்ணுக்கும் இடையேயான இந்தத் திருமணத்தில், மணமகன் தனது மனைவிக்கு 30 கோடி இந்தோனேசிய ரூபாய் (இந்திய ரூபாயில் சுமார் 1.5 கோடி) பரிசாக அளித்தார். முதலில் 10 கோடி என்று கூறப்பட்டது, ஆனால் பின்னர் 30 கோடி என்பது உறுதியானது.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய் (இந்திய ரூபாயில் 500) பரிசாக வழங்கப்பட்டது. இந்தத் திருமணத்தை புகைப்படம் எடுக்க வந்த ஒரு நிறுவனம், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது, இதனால் இந்தச் சம்பவம் வைரலானது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு அந்தப் புகைப்பட நிறுவனம், தமக்கு கட்டணம் செலுத்தாமல் தம்பதியர் தப்பி ஓடிவிட்டதாகக் கூறி, போலீசில் புகார் அளித்தது.

இந்தோனேசிய போலீசும், இந்தப் பெரும் தொகையைப் பரிசாக அளித்தது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது. 74 வயது முதிய மணமகன், திருமணம் உண்மையானது என்றும், அவர்கள் தப்பவில்லை என்றும், இப்போது தனது மனைவியுடன் இணைந்தே இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார். பெண்ணின் குடும்பமும், தம்பதியர் தற்போது தனிமையில் இருப்பதாக உறுதியளித்துள்ளது.