உலகப் புகழ்பெற்ற பாரிஸிலுள்ள லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிர்ச்சிகரமான கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதில், பேரரசர் நெப்போலியனின் விலைமதிப்பற்ற நகைகள் திருடப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிப்பதாவது, ஞாயிற்றுக்கிழமை காலை அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த கொள்ளை நடந்தது. சீன் நதிப் பக்கம் வழியாக கட்டிடத்துக்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட குழு இதை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

அருங்காட்சியகத்தில் தற்போது நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளைப் பயன்படுத்தி, ஒரு சரக்கு லிப்டின் வழியாக நேராக நகைகள் வைக்கப்பட்ட கேலரிக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும், மூன்றாவது நபர் வெளியில் காவல் காத்திருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது பற்றி புலனாய்வாளர்கள் கூறுகையில், திருடர்கள் நுணுக்கமாகத் திட்டமிட்டதாகவும், பேரரசர் நெப்போலியன் மற்றும் பேரரசி ஜோசபின் ஆகியோரின் நகைச் சேகரிப்பிலிருந்து ஒரு நெக்லஸ் மற்றும் ஒரு ப்ரூச் உட்பட ஒன்பது நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நகைகள் 1804 ஆம் ஆண்டு நெப்போலியனின் முடிசூட்டு விழாவிற்குப் பிறகு சேர்க்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க சேகரிப்பாகும். இதில், நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய அரச குடும்பங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரிய பொருட்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கொள்ளை சம்பவம் நடந்தவுடன், லூவ்ரே நிர்வாகம் “விதிவிலக்கான காரணங்களுக்காக” அருங்காட்சியகம் திடீரென மூடப்பட்டதாக அறிவித்தது. இதனால் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், கண்ணாடிப் பிரமிட் நுழைவாயிலிலிருந்து பெருமளவு மக்கள் வெளியேறும் காட்சிகள் காணப்பட்டன.