உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில், பட்டம் பிடிக்க முயன்ற மூன்று வயது சிறுவன் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. லக்னோவின் அஜீஸ் நகர் பகுதியில் வசிப்பவர் நாசித் அலி. இவரது மகன் அனீஸ் (3) நேற்று மதியம் தங்களது மூன்று மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் மேலே ஒரு பட்டம் பறந்ததை கண்டு, அதைப் பிடிக்க முயன்ற சிறுவன் மாடியின் கைப்பிடி சுவரில் ஏறினான். அந்தச் சமயத்தில் அவரது கால் தவறி, மூன்றாவது மாடியில் இருந்து நேராக சாலையில் விழுந்தான்.
சிறுவன் கீழே விழுந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, பலத்த காயமடைந்த அனீஸை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பட்டத்தை பிடிக்க முயன்றபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் மரணம், அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
