“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் சீனியர் அணிகள் தங்கள் பாகிஸ்தான் எதிரணியுடன் கைகுலுக்க மறுத்த சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்று, ஜோகூர் சுல்தான் கோப்பை ஹாக்கி தொடரிலும் இதே நிலை உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் ஹாக்கி போட்டியின் தொடக்கத்தில், இரு அணியினரும் வழக்கம்போல கைகுலுக்கவில்லை. எனினும், வீரர்கள் ஹை-ஃபைவ் போன்ற சின்ன சைகைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலை குறித்து, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் (PHF) மூத்த அதிகாரி ஒருவர், “இந்திய வீரர்கள் கைகுலுக்கவில்லை என்றால் அதனைப் புறக்கணித்து முன்னேற சொல்லி எங்கள் வீரர்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தது. போட்டியில் எந்தவிதமான உணர்ச்சிப் பெருக்கத்தையும் தவிர்க்கும்படி கூறியிருந்தோம்,” எனத் தெரிவித்தார்.

அதேசமயம், PHF தனது வீரர்களிடம், அரசியல் பின்னணிகளைப் பொருட்படுத்தாமல், ஆட்டத்திலேயே முழு கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தியிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த ஆட்டத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் 3–3 என்ற கணக்கில் சமனடைந்தன. போட்டியின் தொடக்கத்தில் காணப்பட்ட சற்று உறைந்த சூழ்நிலை, ஆட்ட முடிவில் நட்பாக மாறியது. கடுமையான போட்டி முடிந்ததும், இரு அணியினரும் கை குலுக்கிக் கொண்டு விளையாட்டு மரியாதையை வெளிப்படுத்தினர்.

 

போட்டியின் தொடக்கத்தில் பாகிஸ்தான் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 5வது நிமிடத்தில் ஹன்னன் ஷாஹித் பெனால்டி ஸ்ட்ரோக்கில் கோல் அடித்தார். பின்னர் சுஃப்யான் கான் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். பின்னர் இந்தியா மீள்திரும்பி தாக்குதல் நடத்தியது. 43வது நிமிடத்தில் அரிஜீத் சிங் ஹண்டால் பெனால்டி ஸ்ட்ரோக்கில் கோல் அடித்து வித்தியாசத்தை குறைத்தார். 47வது நிமிடத்தில் சவுரப் ஆனந்த் குஷ்வாஹா சமன் செய்தார். 53வது நிமிடத்தில் மன்மீத் சிங் இந்தியாவுக்கு முன்னிலை தந்தார். ஆனால் 55வது நிமிடத்தில் சுஃப்யான் மீண்டும் கோல் அடித்து பாகிஸ்தானை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

இதன் மூலம் இந்தியா தொடரில் இன்னும் தோல்வி அடையவில்லை. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவை 7–1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. ஆனால், அதன் பின்னர் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியடைந்தது. மறுபுறம், கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் தலைமையிலான இந்திய அணி, கிரேட் பிரிட்டன் (3–2) மற்றும் நியூசிலாந்து (4–2) அணிகளை வீழ்த்தி வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.