ஆப்கானிஸ்தான் தலீபான் அரசின் வெளியுறவு மந்திரியாக உள்ள அமீர் கான் முத்தகி, முதன்முறையாக 6 நாள் அரசு முறை இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய வருகையின் போது, முத்தகி, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பல்வேறு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை முத்தகி நடத்திய போது, பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

அந்த சந்திப்பில் பேசிய முத்தகி, “இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தானில் இடமில்லை. அமைதிக்காக நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் போல பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்,” என்று கூறினார்.

அவர் மேலும், “எங்களுக்குப் பாகிஸ்தானை தவிர, வேறு 5 அண்டை நாடுகளும் உள்ளன. அனைவருடனும் நாங்கள் நல்லுறவாக இருக்கிறோம். எங்களுக்கு யாருடனும் மோதல் விருப்பமில்லை. தற்போது ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறது,” என்றார்.

மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பிற இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினதாகவும் முத்தகி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை என்றால், எங்களுக்கும் வேறு வழிகள் உள்ளன. சமீபத்திய எல்லை மோதலில் 50 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் 19 நிலப் பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றி வைத்துள்ளது,” என்றார். இந்த சூழ்நிலையில் முத்தகியின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆன முதல் போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.