இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாகவே நிலவி வரும் தடுமாற்றம், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது. கடந்த மே மாதம் இரு நாடுகளும் மாறி மாறி பதிலடி தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது தாக்குதல் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தான் தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது திடீர் தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் காபூலில் உள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்துத் தான் பாகிஸ்தான் இந்த வான்வழி தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, TTP தலைவரான நூர் வாலி மெஹ்சூத் இருந்ததாக அறியப்படும் ஷாஜித் அப்துல் ஹக் சதுக்கம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 2018-ல் TTP தலைமையை ஏற்ற மெஹ்சூத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாத பாகிஸ்தான், 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி, “பாகிஸ்தான் நம் எல்லையை மீறி தாக்குவது என்பது எங்களது பொறுமையை சோதிப்பது போல. இந்தியாவுடன் ஆப்கனுக்கு நல்ல உறவுகள் இருக்கின்றன. எங்களை புரிந்துகொள்ள இங்கிலாந்து, சோவியத் ரஷ்யா, அமெரிக்காவிடம் கேளுங்கள்” எனக் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாக்கி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சீராக வளர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தானின் இந்த தாக்குதல், எல்லை நிலையை மேலும் மோசமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சமூகத்தால் இந்த தாக்குதல் கடுமையாக விமர்சிக்கப்படுவதுடன், தாலிபான் தலைமையும் விரைவில் பதிலடி நடவடிக்கையை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.