நாடு முழுவதும் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக நோன்பு நோற்றுத் தவம் இருப்பார்கள். இதற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் சந்தைகள் பெண்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளன.

இந்த பண்டிகைச் சூழலில், உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள நெரிசலான சந்தையில், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு ஆண் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த சந்தையில் இருந்த சில பெண்கள் அவரைச் சுற்றி பிடித்து அடித்த சம்பவம் கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் காணொளியில், பல பெண்கள் சேர்ந்து அந்த நபரை அடிப்பதையும், அவர் தன்னை விடுமாறு கெஞ்சுவதையும், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்பதையும் காணலாம். சில நிமிடங்கள் தாக்குதலுக்குப் பிறகு, பெண்கள் அவரை விடுவித்தனர்; பின்னர் அவர் அந்த இடத்தை விட்டு விரைவாக தப்பி ஓடியுள்ளார்.

 

சந்தையில் இருந்த பிற பெண்களும் இந்த சம்பவத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருந்ததாகவும் காணொளியில் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பந்தப்பட்ட பெண்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டதா என்பதும் தெளிவாக இல்லை.

அந்த நபரின் அடையாளம் இதுவரை  தெரியவில்லை என்றாலும், சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.