உத்தரபிரதேசம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் குடும்பத்தையும் கிராமத்தையும் அதிர்ச்சியடையச் செய்த கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மாமியாருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் சிதிபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லா பார்சி கிராமத்தில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் பிரமோத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரமோத் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு சென்று வந்தபோது, இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து, கள்ள உறவு உருவானது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த உறவு நீடித்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, பிரமோத் மற்றும் அவரது மாமியாரின் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி, குடும்பத்தினரும் கிராமத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரமோத்தின் மனைவி ஷிவானி, தனது கணவரின் உறவைப் பற்றி நீண்ட நாட்களாக சந்தேகம் கொண்டிருந்தார். இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான தகராறு வன்முறையாக மாறியதில், பிரமோத் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. ஷிவானியின் உடல் வீட்டின் வராண்டாவில் கண்டெடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், ஷிவானி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஷிவானியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பிரமோத், அவரது மாமியார் மற்றும் சில குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக, ஷிவானியின் மாமியார் தனது மகளே இந்தக் கொலைக்குப் பின்னால் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதேவேளை, ஷிவானியின் மாமா, “மணவாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கள்ள உறவை எதிர்த்ததால் ஷிவானி கொலை செய்யப்பட்டார்” எனக் கூறியுள்ளார்.

பிரமோத் தற்போது தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.