தமிழக அரசியலில் தற்போது முக்கியமான விவாதமாக அமைந்துள்ளது அதிமுக–தவெக இடையிலான கூட்டணி நிலை. கடந்த சில நாட்களாக, இரு தரப்பிலும் இருந்து கூட்டணி தொடர்பான பல்வேறு செய்திகள் பரவி வந்தன.
இதையடுத்து, நேற்றைய பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “விஜய்யின் தவெக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது” என்ற கூற்றை நேரடியாகக் கூறாமலே சூசகமாக பரப்புரை நிகழ்த்தியிருந்தார். இந்த சூசகமான அரசியல் குரல்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிக் கோட்பாடு தொடர்பாக புதிய கேள்விகளை எழுப்பியிருந்தன.
இந்நிலையில், தவெக தரப்பில் இருந்து இதற்கான தெளிவான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் எந்தவிதமான கூட்டணியும் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனித்துப் போட்டியிடும் முடிவு தான் தவெக தலைவர் விஜய்யின் உறுதியான நிலைப்பாடு எனவும், அதில் மாற்றமில்லை எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பரப்பப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
