ராஜஸ்தானில் நேற்று  இரவு எல்.பி.ஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மற்றொரு லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டுடு பகுதி அருகே நடந்தது. இந்த விபத்தில் லாரியில் ஏற்றிச் சென்ற எல்.பி.ஜி சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்கத் தொடங்கின. இதனால் ஏற்பட்ட தீவிபத்தால் சுற்றுப்புறம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

தீப்பிழம்புகள் பல மீட்டர் உயரத்தில் பறந்தன; வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திலும் கேட்கப்பட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். தீவிபத்தில் அருகில் நின்றிருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. தகவல் அறிந்ததும், காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா செய்தியாளர்களிடம் பேசியபோது, “இரு லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் காணாமல் போயுள்ளனர்; அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை,” என்று தெரிவித்தார். மேலும் இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இதேபோன்ற விபத்தில் எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.