சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பறவைகளுடன் ஒரு பெண் செய்த சமூகப் பரிசோதனையைப் பற்றியது. இந்த வீடியோவில், ஒரு பெண் ஆஸ்திரேலியாவில் காணப்படும் உலகின் இரண்டாவது பெரிய பறவையான ஈமு (Emu) பறவைகளின் பராமரிப்பு இடத்தில், தான் மயக்கமடைவது போல் நடிக்கிறார்.

இதன் மூலம் ஈமு பறவைகள் தன்னைப் பற்றி அக்கறை கொள்கிறதா என்பதை அறிய முயற்சிக்கிறார். பெண் ஒரு ஈமு பறவையின் பின்னால் சென்று மயங்கி விழுவது போல் நடிக்க, முதலில் அந்தப் பறவை பயந்து ஓடிவிடுகிறது. ஆனால், சில வினாடிகளில் மற்ற எமு பறவைகள் அங்கு வந்து, அவரை எழுப்ப முயற்சிக்கின்றன.

ஒரு பறவை தன் அலகால் அவரது கையைத் தூக்கி, அவர் எழுகிறாரா எனப் பார்க்கிறது. இந்த இதயத்தைத் தொடும் காட்சி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பை அழகாக வெளிப்படுத்துகிறது.

இந்த 54 வினாடிகள் கொண்ட வீடியோ, சமூக வலைதளமான எக்ஸ்-இல் @AMAZlNGNATURE என்ற கணக்கில் “ஈமு பறவைகளின் இடத்தில் மயக்கமடைவது போல் நடித்து, அவை அக்கறை கொள்கிறதா எனப் பார்த்தேன்” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 63,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவைப் பார்த்து, நூற்றுக்கணக்கானோர் பாராட்டியுள்ளனர்.

சமூக வலைதளப் பயனர்கள் இதற்கு அமோக வரவேற்பு தந்துள்ளனர். ஒருவர், “விலங்குகள் மனிதர்களை விட அதிக விசுவாசமும் அன்பும் கொண்டவை என்பதை இது உறுதிப்படுத்துகிறது” என்று கூற, மற்றொருவர், “இந்தப் பறவைகளின் நடத்தை, குடும்ப உறுப்பினரைப் போல அக்கறையுடன் இருப்பது போல் உள்ளது” என்று புகழ்ந்தார்.

ஒரு பயனர் நகைச்சுவையாக, “இந்தப் பறவைகள் மனிதர்களாக இருந்தால், 108 ஆம்புலன்ஸையே அழைத்திருக்கும்” என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ, விலங்குகளின் உணர்வுகளையும் அவற்றின் அன்பையும் பறைசாற்றும் அற்புதமான தருணமாக அமைந்துள்ளது.