உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், அதிகாலை 5.45 மணியளவில் ஜிடி சாலையில் உள்ள ராகேஷ் மார்க்கில் நிகழ்ந்தது. வேகமாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனம், சாலையில் நடந்து சென்ற நான்கு பாதசாரிகளின் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விபின் சர்மா, கமலேஷ் தேவி, மீனு பிரஜாபதி மற்றும் சாவித்ரி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் மீனு பிரஜாபதி மற்றும் சாவித்ரி தேவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். கமலேஷ் தேவி, சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பரிதாபமாக இறந்தார். விபின் சர்மா தற்போது சிகிச்சையில் உள்ளார், மேலும் அவரது நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடத்திலிருந்து ஓட்டுநர் தப்பிச் சென்ற நிலையில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிஹானிகேட் காவல் நிலையம் இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
#गाजियाबाद में 4 महिलाएं मॉर्निंग वॉक को निकली. एक लेन पार करके डिवाइडर के सामने खड़ी थी.
एक बेकाबू कार आई और महिलाओं को रौंद डाला. 3 महिलाओं की मौके पर मौत हो गई है pic.twitter.com/6n10szPKwA
— Narendra Pratap (@hindipatrakar) October 4, 2025
இந்த சம்பவத்தின் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சுமார் 18 வினாடிகள் நீளமான அந்த வீடியோவில், பாதசாரிகள் சாலை பிரிப்பான் அருகே காத்திருந்து சாலை கடக்க முயற்சிக்கும் தருணத்தில், கட்டுப்பாட்டை இழந்த வெள்ளை நிற கார் திடீரென மோதும் காட்சி பதிவாகியுள்ளது.
இது குறித்து நந்த்கிராம் உதவி காவல் ஆணையர் (ACP) உபாசனா பாண்டே, செய்தி நிறுவனம் ஏஎன்ஐக்கு தெரிவித்ததாவது:“ஜிடி சாலையில் ஒரு நான்கு சக்கர வாகனம் நான்கு பாதசாரிகள் மீது மோதியதாக தகவல் கிடைத்தது. இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பந்தப்பட்ட வாகனம் போலீசார் காவலில் எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
