கர்நாடகாவின் ஹொஸ்பேட்டில், 34 வயது மாற்றுத்திறனாளியை ஒரு கும்பல் கொலை செய்து, அவரது பெயரில் எடுக்கப்பட்ட ₹5.2 கோடி இன்சூரன்ஸ் தொகையை மோசடியாக பெறுவதற்காக விபத்து போல் காட்டிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயநகர மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவரின் உண்மையான மனைவி ஷரதம்மா அளித்த புகாரை அடுத்து இந்த வழக்கு அம்பலமானது.

கம்பளி தாலுக்காவில் உள்ள ஜீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த கங்காதர், மூன்று ஆண்டுகளுக்கு முன் பக்கவாதத்தால் இடது பக்க உடல் செயலிழந்து மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வந்தார். இந்தக் கும்பல், கங்காதரின் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து, “நிங்கம்மா” எனும் போலி மனைவியை பயனாளியாகக் குறிப்பிட்டு, கொலை செய்து விபத்து போல் நாடகமாடியது.

செப்டம்பர் 28 காலை, சந்தூர் ரோட்டில் உடல் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. முதலில் இது வாகன விபத்து என தோன்றினாலும், கங்காதரின் மனைவி, அவர்களிடம் இரு சக்கர வாகனம் இல்லை எனக் கூறியதால் சந்தேகம் எழுந்தது.

விசாரணையில், கும்பல் கங்காதரை கொலை செய்து, அவரது உடலை நகரின் புறநகர்ப் பகுதிக்கு எடுத்துச் சென்று, இரு சக்கர வாகனத்தில் வைத்து, காரால் மோதி விபத்து போல் காட்டியது தெரியவந்தது.

காவல்துறை இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளது, இதில் போலி மனைவியாக நடித்த ஹுலிகேம்மா, கோப்பாலைச் சேர்ந்த கிருஷ்ணப்பா, ஹொஸ்பேட்டைச் சேர்ந்த ரவி, அஜய், ரியாஸ் மற்றும் யோகராஜ் சிங் ஆகியோர் அடங்குவர். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மொபெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.