2025ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியல் (Hurun India Rich List 2025) நேற்று வெளியாகியது. இதில், பாரதியின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி, ரூ.8.15 லட்சம் கோடியுடன் இந்த ஆண்டில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்ற இளம் தொழில்நுட்ப நிபுணர் இடம்பெற்றுள்ளதை குறிப்பிடத்தக்கது. பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமாக உள்ள இவர், ரூ.21,190 கோடி சொத்துடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தனது கல்விப் பயணத்தை ஐஐடி மெட்ராஸில் இளங்கலை மற்றும் முதுகலைக் கம்ப்யூட்டர் அறிவியல் துறையில் முடித்தார். பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் கணினி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றார்.

அவரது தொழில்முறை பயணத்தில், உலகத் தரத்தில் பெயர் பெற்ற OpenAI, DeepMind மற்றும் Google போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இடம்பெறுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு OpenAI-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக சேர்ந்தார். பின்னர் DeepMind மற்றும் Google நிறுவனங்களில் பயிற்சி பெற்று, 2021-ம் ஆண்டு மீண்டும் OpenAI-யில் அறிவியல் நிபுணராக (Scientist) சேர்ந்தார்.

ஒரு வருடம் கழித்து, தனது சொந்த ஆராய்ச்சி மற்றும் முயற்சிக்கு அடித்தளமிட்டு, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதியதொரு புரட்சியை உருவாக்க முயற்சித்தார். இதன் விளைவாக, Perplexity AI என்ற நிறுவனத்தை 2022ல் நிறுவினார்.

மேலும் தற்போது, பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனம் உலகளவில் செயற்கை நுண்ணறிவு தேடல் செயலிகளில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. இதன் வளர்ச்சி, அரவிந்தை இந்தியாவின் முன்னணி இளம் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

மேலும் Harun India வெளியிட்ட பட்டியலின்படி, தற்போது இந்தியாவில் மொத்தம் 358 பில்லியனர்கள் (அதிக கோடீஸ்வரர்கள்) உள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்தின் இடம் பெருமிதத்திற்குரியது.