கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரழிவில் 41 பேர் உயிரிழந்தனர்;
மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், “கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது.
உண்மையில், நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அப்போது மருத்துவமனையில் 6 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்ததால், அரசு மருத்துவர்களும் அங்கு சென்று சிகிச்சை வழங்கினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்றதாகவும், அவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து காசோலை வழங்கப்பட்டதாகவும் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
ஆகையால், பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்பது வதந்தி மட்டுமே எனவும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
