சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைன் செயலியின் மூலம் பழகிய தஞ்சாவூர் நபரிடம் இருந்து தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததையடுத்து, அதைக் கைப்பற்றிய அவர் அவரிடம் ஆபாச வீடியோக்கள் கோரிக்கையுடன் தொல்லை கொடுத்து வந்தார். இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிப் (25) என்பவர், 2024-ம் ஆண்டு ஆன்லைன் செயலியில் சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருடன் பழகி வந்தார். நட்பின் பெயரில் அந்த இளம்பெண், தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆசிப், ஆபாச வீடியோக்கள் அனுப்புமாறு கோரி, பலமுறை மிரட்டி தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் ஆசிப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், சைபர் கிரைம் பிரிவு போலீசார், வழக்கை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். விசாரணையின் போது சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் முறையாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், நீதிமன்ற நீதியரசர் ராம்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில்,  2 ஆண்டுகள் சிறை, ரூ.50,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் கூடுதல் சிறை) வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதோடு இளம்பெண்களுக்கு எதிரான தொல்லை சட்டம் (IPC 354 D)-ன் கீழ், மேலும் 2 ஆண்டுகள் சிறை, ரூ.5,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் 1 மாத சிறை) என தீர்ப்பு வழங்கினார். மேலும், இத்தனை சிறைத் தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.