திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பகுதியில் காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாளையக்காடு 2-வது வீதியைச் சேர்ந்த பாண்டியனின் மகன் யோகேஷ் (19), ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த ஒரு இளம்பெணுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில், இருபுறமும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த யோகேஷ், ஊத்துக்குளி சாலை அருகேயுள்ள பாளையக்காடு எஸ்.ஆர்.சி. மில் மேம்பாலத்துக்கு சென்று, யாரும் எதிர்பாராத விதத்தில் பாலத்தின் மீது இருந்து சுமார் 30 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தார்.

இதனால் அவரது தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில்  உயிருக்காக போராடிய அவரை, அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவிப் பிறகு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி யோகேஷ் உயிரிழந்தார். மேலும் இது தெடர்பாக, திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.