நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பள்ளக்குழிப்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட கொடூரக் கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் முதியவர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட வாகன ஓட்டிகள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்டவர் பள்ளக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (60) என்பதும், தின்பண்டம் வாங்குவதற்காக வீட்டைவிட்டு சென்றபோது வழியில் தாக்கி கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

முகம் சிதைந்த நிலையில் இருந்ததால், தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் சான்றுகள் சேகரிக்கப்பட்டன. அவரது தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப தகவல்கள் உறுதியாகின. இது பற்றி விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவலின்படி, செல்வராஜின் அண்ணன் மகன் துரைசாமி, ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து செல்வராஜ் அவ்வப்போது கண்டித்துவந்தார். இதனால் ஆத்திரமடைந்த துரைசாமி, சித்தப்பா செல்வராஜை தனியாக சாலையில் சென்றபோது வழிமறித்து, கல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துரைசாமி கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.