ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது. இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50%க்கும் மேல் குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறியது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளானது. செய்தியாளர்களிடம் பேசிய ரவி கிஷன், “ஜிஎஸ்டி வரி குறைப்பினால் 1 ரூபாய் பொருளின் விலை 40-45 பைசாவாகவும், 100 ரூபாய் பொருளின் விலை 45 ஆகவும் இருக்கும். இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு” என்று தெரிவித்தார். இந்த அறிக்கையை கேட்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து கிண்டல் செய்து வருகின்றனர்.
பாஜக எம்.பி. ரவி கிஷன் பேசிய இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அவரது பதிவில், “ரவி கிஷனுக்கு நிதியமைச்சரிடமிருந்து விரைவில் அழைப்பு வரும். பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பொய் கூறி உலக சாதனை படைத்தது வருகிறார்கள்” என்று தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் இந்த விமர்சனம் இணையத்தில் வைரலாகி, பாஜகவின் ஜிஎஸ்டி கொள்கையை மீண்டும் விவாதிக்க வைத்துள்ளது. ரவி கிஷனின் அறிக்கை தவறான கணிப்பாக இருப்பதாகவும், மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் பலர் விமர்சித்துள்ளனர்.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் நன்மைகளை அரசு கொண்டாடுவதாக இருந்தாலும், ரவி கிஷனின் இந்த கூற்று அரசியல் வட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 375 பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் பயனடைந்தாலும், 50%க்கும் மேல் விலை குறைப்பு என்பது மிகையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அகிலேஷ் யாதவின் கிண்டல் பதிவு, பாஜகவின் பொருளாதார கொள்கைகளை சாடும் வகையில் பொதுமக்களிடையே பரவி வருகிறது. இந்த சம்பவம், ஜிஎஸ்டி அமலின் நன்மைகளையும் தவறுகளையும் மீண்டும் ஆய்வு செய்ய வைத்துள்ளது.
