தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அடகுதூரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி மஞ்சுளா (35) மற்றும் இரண்டு மகன்களுடன் வேலைக்காக சில மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு சென்றிருந்தார்.
அங்கு சங்கர் கூலி வேலை செய்து வந்தார். மஞ்சுளா வீடுகளில் வேலை பார்த்தார். இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் சங்கரும், மஞ்சுளாவும் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். இதனால் விரக்தியடைந்த மஞ்சுளா, கடந்த 14-ஆம் தேதி ஹைதராபாத் அனுபுரத்தில் உள்ள தனது சகோதரி ராணி வீட்டிற்கு வந்திருந்தார்.
சங்கர், மனைவியைத் தேடி சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்தபோது, குடும்பத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அப்போது, இனி மனைவியைத் தொந்தரவு செய்யமாட்டேன் என சங்கர் உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், ராணியின் கணவர் வெளியூர் சென்ற நிலையில், வீட்டில் சங்கர், மஞ்சுளா மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்தனர். அந்த சமயம், தூக்கத்தில் இருந்து எழுந்த சங்கர் திடீரென சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் அறுத்தார். ரத்தம் பெரிதும் பீறிட்டு, சில நிமிடங்களில் மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியை கொன்ற சங்கர், கதவை வெளியில் பூட்டிவிட்டு தப்பிச் சென்றார். காலையில் எழுந்த குழந்தைகள் தாய் இறந்து கிடப்பதை கண்டு கதறித் துடித்தனர். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கொடூர சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
