தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், நேற்று முன்தினம் திருச்சியில் தனது அரசியல் பிரசாரத்தை தொடங்கினார். விஜய்யை வரவேற்க த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) தொண்டர்கள் பெருமளவில் திரண்டதாலும், ஏற்பாடுகளில் ஏற்பட்ட தாமதத்தாலும், அவரது உரை தாமதமானது. பின்னர் அரியலூர் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த சூழலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேற்று காலை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜயின் அரசியல் தொடக்கம், அவரது அணுகுமுறைகள் குறித்து கருத்து தெரிவித்தார். “விஜய்க்கு வாழ்த்துகள்; விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அவருக்கென ஒரு ஸ்டைல் உள்ளது. அவரை விமர்சிக்கவோ, ஆலோசனை கூறவோ தேவையில்லை. அவருக்குத் தகுந்த வகையில் பேசும் அறிவும் அனுபவமும் இருக்கிறது,” என்றார்.
“இப்போது விஜய் சந்திக்கும் சவால்கள் போன்றவையே 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் சந்தித்தவை. திரையுலகிலிருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் இரண்டும் அதிகம். ஆனால் அந்த சவால்களை மீறி வெற்றி பெறும்போது மட்டுமே மக்கள் அங்கீகாரம் கிடைக்கும்,” என அவர் சுட்டிக்காட்டினார். “அவரது அரசியல் பயணத்திற்கு எனது வாழ்த்துகள். எதிர்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
மேலும் தேமுதிக கூட்டணி நிலை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டில், எங்கள் கட்சியின் நிலைப்பாடுகள், யாருடன் கூட்டணி என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தெளிவாக அறிவிக்கப்படும்,” என கூறினார்.
