பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நான்தான் கட்சியின் தலைவர் என்று கூறிய நிலையில் அன்புமணியை சமீபத்தில் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதாவது அன்புமணியின் மீது 16 குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என இருமுறை அவருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் அன்புமணி பதிலளிக்காததால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும் என்றும் அவரை கட்சியின் நலனுக்காக நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் கே. பாலு இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டதாகவும் அது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அந்த கடிதத்தை சுட்டிக்காட்டிய நிலையில் கடந்த மாதம் மகாபலிபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகவும் மாம்பழம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரித்துள்ளதாக அவர் கூறியது தற்போது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
