ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக தோற்கடித்து சக்திவாய்ந்த வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் முடிவில், இந்திய வீரர்கள் நேராக டிரஸ்ஸிங் ரூமிற்குச் சென்று, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத நிகழ்வு, தற்போது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் லத்தீப்,  தனது வேதனையை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில்: “முன்பு போர்கள் நடந்திருக்கலாம், ஆனால் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. கிரீஸில் இறங்கும் வீரர்கள் முதலில் ஒருவருடன் ஒருவர் கைகுலுக்க வேண்டும். அதுவே விளையாட்டு மரியாதை. இன்று நடந்தது, வாழ்நாளில் களங்கமாகவே இருக்கும்.”

“பஹல்காம் தாக்குதல் அல்லது அரசியல் நிலைப்பாடு பற்றிய தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், களத்தில் நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களாக, நீங்கள் விளையாட்டு மரியாதையை கடைபிடிக்க வேண்டும்.” இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதுமே உணர்வுப் பூர்வமானதாகவே இருக்கும். அதில் இந்தியா, பாகிஸ்தானை 127 ரன்களில் தடுத்து, வெற்றியை வசப்படுத்தியது.

இந்திய அணிக்காக, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பேட்டிங்கில் இந்தியா, 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் இன்றைய வெற்றிக்கு முதன்மை காரணமாக இருந்தனர்.

மேலும் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வாய்விட்டு பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. ஒருபுறம் இந்திய ரசிகர்கள் “இந்திய வீரர்கள் உணர்வுப்பூர்வமான முடிவே எடுத்துள்ளனர்” என கூறுவதுடன், மற்றொரு புறம், விளையாட்டு மரியாதை வழுவியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.