கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தில், கள்ளக்காதல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தனது மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கொடூரமாகக் கொன்று, இருவரின் தலைகளையும் துண்டித்து பையில் போட்டுச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தலைகளுடன் நேரடியாக காவல்துறைக்கு சென்று சரணடைந்த அந்த நபரின் செயல், காவல்துறையையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காவல்துறை தரவுகளின்படி, கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த கொளஞ்சி (60) கூலி தொழிலாளி. இவர் முதல் மனைவி கலியம்மாள். இவர்களுக்கு 5 குழந்தைகள். ஆனால் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மனச்சச்சரவில், கலியம்மாள் தனது மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
பின்னர், கொளஞ்சி நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த லட்சுமி (40) என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். செப்டம்பர் 11ஆம் தேதி காலை, கொளஞ்சியின் வீட்டின் மொட்டை மாடியில், லட்சுமி மற்றும் தங்கராசு (57) ஆகிய இருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். இருவரின் தலைகளும் அருகில் காணப்படவில்லை.
அக்கம்பக்கத்தினர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமார் உள்ளிட்டோர் விரைந்து வந்து, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மொட்டைமாடியில் காணப்பட்ட செல்போன் மூலம், இறந்தது தங்கராசு என அடையாளம் காணப்பட்டார். அதற்கிடையே, சடலங்களின் தலைகளை தேடிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இதற்கிடையே, கொளஞ்சி தானாகவே வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்று, தன்னிடமுள்ள இரண்டு தலைகளுடன் போலீசாரிடம் சரணடைந்தார். பின், அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் வெளியான தகவலின்படி, லட்சுமிக்கும், தங்கராசுவுக்கும் இடையே முன்னதாகவே பழக்கம் இருந்து வந்தது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதாகவும், கொளஞ்சியின் வெளியூர்ச் பயணங்களை பயன்படுத்திக் கொண்டு இருவரும் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப்பற்றி அறிந்த கொளஞ்சி, இருவரையும் முறையே கண்டித்தும், கள்ள உறவைத் தொடர்ந்ததால், இந்த முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
நேற்று இரவு, வெளியூர் செல்லப்போவதாக மனைவியிடம் கூறிய கொளஞ்சி, அருகிலுள்ள இடத்தில் மறைந்திருந்தார். பின்னர், லட்சுமி தங்கராசுவை அழைத்து வீட்டுக்கு வரச் செய்ததும், இருவரும் மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். அந்த நேரத்தில் கொளஞ்சி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மாடியில் சென்று, முதலில் தங்கராசுவையும், பின்னர் தன்னைத் தடுக்க முயன்ற லட்சுமியையும் வெட்டிக்கொன்றுள்ளார். தொடர்ந்து, இருவரின் தலைகளையும் துண்டித்து, பையில் வைத்து கொண்டு பஸ் மூலம் வேலூர் சிறைக்கு புறப்பட்டுள்ளார்.
தங்கராசு மற்றும் லட்சுமியின் சடலங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொளஞ்சியை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
