ஆந்திராவின் பல்லாரி மாவட்டத்தில், வெறும் ரூ.300-க்காக தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாரி மாவட்டம், ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் முகமது ஆசிப் என்பவரின் வீட்டுக்கு பின்புறம், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ஒருவர் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏ.பி.எம்.சி. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதலில் மரணமடைந்தவர் யார் என்பது தெரியவில்லை. விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், இறந்தவர் அந்த பகுதியில் தங்கியிருந்த அகதித் என்பதும் அவர் தொழிலாளி என்பதையும்உறுதி செய்தனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் அனுமந்த் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி இரவும், 5-ஆம் தேதி அதிகாலை அவர்கள் இருவரும் தீவிரமான மதுபோதையில் இருந்ததாகவும், மேலும் மது வாங்க பணம் தேவைப்பட்ட நிலையில் யாரும் பணம் தரவில்லை என்பதால், அருகே இருந்த தொழிலாளியை குறிவைத்து அவரது தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரிடமிருந்த ரூ.300-ஐ எடுத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் , பால்ராஜ் மற்றும் அனுமந்த் ஆகிய இருவர் மீதும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.
