தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  செல்வப்பெருந்தகை, அதிமுக–பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை எனக் கூறி, கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில் கூறியதாவது:  “அதிமுக–பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் இடையே எதிர்ப்பே மேலோங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்கான விளைவுகள் தெளிவாகவே தெரியவந்துள்ளன. இதையடுத்து டி.டி.வி. தினகரனும், ஓ.பி.எஸ்.யும் கூட்டணியிலிருந்து விலகி விட்டனர். இன்னும் பலரும் விலகும் நிலை உருவாகி வருகிறது. இது ஒரு மூழ்கும் கப்பலாக மாறியுள்ளது,” என அவர் கூறினார்.

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெளியேறும் சூழ்நிலையும் இதன் எதிரொலியாகவே பார்க்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். “பாஜக ஒரு உறவாடி கெடுக்கும் கட்சி. இது நாட்டின் பல மாநிலங்களில் நடந்துள்ள நிகழ்வுகளில் தெளிவாகும். தற்போது, அதே பாணியில் பாஜக, தமிழக அரசியல் களத்திலும் அதிமுகவினுள் பதற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மேலும் இதை உணர்ந்து அதிமுகவினர் விழிப்புடன் நடக்க வேண்டும்,” என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார். மேலும் பாஜகவினர் தற்போது தான் தங்களுடைய சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளனர் எனவும் இன்னும் போகப்போக நிறைய நடக்கும் என்றும் கூறினார்.