அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, கட்சியின் தற்போதைய நிலை குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டார்.
“அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு இரண்டு முக்கிய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதிமுக உடைந்து போவதை தவிர்க்க பல தியாகங்களை செய்தேன். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பரிந்துரைத்தது சசிகலா தான்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். இது தொண்டர்களின் உணர்வை பிரதிபலிக்கிறது. அவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையெனில் நாங்களே இந்த முயற்சியை எடுத்து செயலில் இறங்குவோம். வெளியில் சென்றவர்களை திரும்ப அழைத்தால்தான் நம் வெற்றியை உறுதியாக்க முடியும் என்பது எம்.ஜி.ஆர். கூறிய பாடம்,” என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், பாஜக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவித்து கூறியதாவது: “அதிமுகவின் ஒருங்கிணைப்பு முயற்சி நல்ல முயற்சி. செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு தேவையான பட்சத்தில், நாங்கள் பேசத் தயார். அனைவரும் ஒரு அணியாக இணைவது நிச்சயம். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி ஒரு மாதத்துக்குள்ளும் இது சாத்தியமாகலாம். ஒற்றுமை வந்தால், திமுக ஆட்சியை அகற்ற முடியும்,” என்று அவர் கூறினார். மேலும் இதேபோன்று ஓ பன்னீர்செல்வமும் என் மனதின் குரலாக செங்கோட்டையன் ஒலித்துள்ளார். அவரது முயற்சிக்கு கண்டிப்பாக நாங்கள் அனைவரும் உறுதுணையாக நிற்போம் என்று கூறினார்.
