மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த போலா ஹல்தார் என்பவர், கடந்த புதன்கிழமை தனது வீட்டின் குளியலறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

அரிவாளால் பலமுறை வெட்டப்பட்டதாலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சம்பவ இடத்திலிருந்து போலாவின் மனைவி உபாசனா காணவில்லை என்பதால், முதற்கட்ட சந்தேகங்கள் மனைவியை  நோக்கி பாய்ந்தது.

மூடிய மர்மம்… முதல் கணவரும் சந்தேகத்தில் இறந்தவர்!

போலா ஹல்தாரின் மனைவி உபாசனா பற்றிய தகவல்களை போலீசார் விசாரிக்கும்போது, முன்னதாகவே அவரது முதல் கணவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அந்த மரணமும் தற்கொலை என முடிவளிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின் போது, மாமியார் அளித்த புகாரின் அடிப்படையில் உபாசனாவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் காஷ்மீருக்கு தப்பியோடிய உபாசனா, 10 மாதங்களுக்கு பிறகு கைதானதும் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு போலாவை இரண்டாவது திருமணமாக செய்து கொண்டார்.

முன்னாள் மனைவியிடம் திரும்ப முயன்றதால் ஏற்பட்ட சிக்கல்

அக்கம்பக்கத்தினரின் வாக்குமூலங்களின்படி, போலாவுக்கும் உபாசனாவுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. போலா, தனது முதல் மனைவியிடம் திரும்பி செல்ல விரும்பியதாலும், இது மேலும் சிக்கலாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதே காரணமாகவே இந்த தம்பதியிடம் வீடு காலி செய்யும்படியும் கூறப்பட்டதாக பக்கத்துவீட்டார்  தெரிவித்துள்ளனர். அதற்குள் இந்த கொடூரமான கொலை சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் கொடூரத்திற்கு ஆயுதம் கொடுத்தார்!

கொலை சம்பவம் தொடர்பாக உபாசனாவின் காதலன் சுபா ராஜ்பங்ஷி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் அவரும்  சிக்கியுள்ளார். விசாரணையின் போது, கொலைக்கான அரிவாளை அவர் தான் வழங்கியதாகவும், உபாசனாவின் திட்டம் முழுமையாக அவரு க்குத் தெரிந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சுபா ராஜ்பங்ஷி போலீஸ் காவலில் உள்ள நிலையில், கொலைக்கார மணப்பெண் உபாசனாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.