உத்திரபிரேதேசம் மாநிலம் காஜியாபாத்தின் லோனி பகுதியில் உள்ள பிரேம் விஹார் காலனியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், அங்கூர் பீகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டிடம் எண் A-66 இல் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் வசிக்கும் அஞ்சலி என்ற பெண், முதல் மாடியில் வசிக்கும் பிரதீப் என்பவர், மூன்று மாதங்களான ஒரு தெரு நாய்க்குட்டியை கொடூரமாக கொன்றதாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அஞ்சலியின் புகாரின் பேரில், பிரதீப் முதலில் நாய்க்குட்டியை குச்சிகளால் கடுமையாக தாக்கி, பின்னர் அதை மேலிலிருந்து கீழே எறிந்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த நாய்க்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. அதில், நாய்க்குட்டி மயக்கமடைந்த நிலையில் இருப்பதையும், பிரதீப் அதை கட்டிடத்திலிருந்து கீழே வீசுவதையும் தெளிவாகக் காணலாம். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, பலரது கண்டனங்களை பெற்றுள்ளது.

 

இதுபற்றி அஞ்சலி அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். “விலங்குகளும் நம்மைப் போலவே உயிருள்ளவை. அவற்றிடம் நடத்தப்படும் கொடுமைகளுக்கு இடமில்லை. இது மனிதநேயத்திற்கு எதிரான செயல்,” என அஞ்சலி கூறியுள்ளார்.

சம்பவத்தால் கோபமடைந்த உள்ளூர் மக்கள், பிரதீப்பின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல பயனர்களும், விலங்குகளுக்கு எதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுபற்றி காஜியாபாத் காவல்துறை தெரிவித்ததாவது: “அங்கூர் பீகார் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றனர்.